சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

காமராஜர் சாலை மற்றும் டாக்டர் பெசன்ட் சாலை சந்திப்பில் தற்போதுள்ள பேருந்து முனையத்தில் இருந்து ஒரு சில வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
2016ம் ஆண்டு இந்த பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த பூங்காவை மறுசீரமைத்து நடைபாதை மற்றும் புதிய நிழற்குடைகளை சென்னை மாநகராட்சி அமைத்திருந்தது.
தற்போது இந்த பேருந்து நிறுத்தத்தை ஒரு சிறிய நேரக் கண்காணிப்பாளர் அறையுடன் கூடிய பேருந்து முனையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் வசதிக்காக காத்திருப்பு தளம், இருக்கைகள் மற்றும் பாலூட்டும் அறை உள்ளிட்டவையும் அமைக்கப்பட உள்ளதாகவும் இதனை நான்கு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
₹1 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதி (MLA-LAD) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் (MPLADS) மூலம் ஒவ்வொரு திட்டத்தின் கீழும் 50% ஒதுக்கீட்டில் கூட்டாக நிதியளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.