சென்னை: சொத்து வரி உயர்வு தொடர்பான கணக்கீட்டு ஆவணங்களைத் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக உத்தரவிட்ட நிலையில், அதற்கு மாநகராட்சி பதில் அளிக்காத நிலையில், மீண்டும் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வீடுகளுக்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதில் பல குளறுபடிகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், தனக்கு விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பே வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது, மனுவில், ‘‘அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் உரிமையாளரான தனக்கு கடந்த 2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியாக ரூ.3,695 வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது அரையாண்டுக்கு ரூ.7,170 ரூபாயாக சொத்து வரியை உயர்த்தி கடந்த ஜூன் 28-ம் தேதியன்று சென்னை மாநகராட்சி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட தெருக்கள், பகுதிகள் என அனைத்துக்கும் ஒரே மாதிரியான சொத்து வரியை நிர்ணயித்து, அதை அதிகப்படுத்தியிருப்பது அதிகார வரம்பைமீறிய செயல். எனவே தனக்கு அனுப்பப்பட்டு உள்ள நோட்டீஸுக்கு தடை விதித்து, அதை ரத்து செய்யவேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிஅனிதா சுமந்த் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநகராட்சி அதன் அதிகார வரம்பிற்குள் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தெருவிற்கும் ஒரே அடிப்படை கட்டணத்தை நிர்ணயித்துள்ளது, இது சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்று கூறியதுடன், வரி உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதன் மூலம் எந்த பயனும் ஏற்படாது, ஏனெனில் மாநகராட்சி ஏற்கனவே அவ்வாறு செய்ய முடிவு செய்துள்ளது, ஆட்சேபனைகளை எழுப்புவதன் மூலம் மாற்று தீர்வு என்று அழைக்கப்படுவது மாயையானது மற்றும் அர்த்தமற்றது, என்றார்.
மனுதாரரின் ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், “மனுதாரருக்கு அரையாண்டு வரி ரூ.3,695ல் இருந்து ரூ.7,170ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இந்த மாற்றப்பட்ட மதிப்பீட்டு முறையில் எந்த தெளிவும் இல்லை என்பதும் உண்மைதான்” என்றார். எந்த முறைப்படி சொத்து வரி கணக்கிடப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், மாநகராட்சி இதுவரை அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனின் நிலை வழக்கறிஞரும் கணக்கீட்டு முறையின் மீது எந்த வெளிச்சத்தையும் காட்ட முடியவில்லை என்று கடிந்துகொண்ட நீதிபதி, மாநகராட்சி சொத்துவரி உயர்வுக்கான கணக்கீட்டு முறையை தாக்கல் செய்தால்தான், இதில் முடிவு எடுக்க முடியும் என்றார். 2022 இன் கவுன்சில் தீர்மானம் எண் 63க்கு பின் பின்பற்றப்படும் மதிப்பீட்டு முறை குறித்த தெளிவு இருக்கும் என்றவர், இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த மே 30 தேதி விசாரணையின்போது, 2022 இன் கவுன்சில் தீர்மானம் எண் 63ஐ விநியோகிக்க மாநகராட்சி வழக்கறிஞருக்கு உத்தரவிட்டதாக சுட்டிக்காட்டினார். ஆனால், இன்று வரை மாநகராட்சி தரப்பில் இருந்து ஒரு ஆவணங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. பின்பற்றப்பட்ட கணக்கீட்டு முறை குறித்தும் அவர்களால் தெளிவுபடுத்த முடியவில்லை” என்று நீதிபதி கூறினார்.
சொத்து வரி உயர்வு கணக்கிடு முறை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு மீண்டும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், மனுதாரருக்கு “மேம்படுத்தப்பட்ட தொகைக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து, வழக்கை ஒத்தி வைத்தார்.