அகமதாபாத்
குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் நடந்த சோதனையில் போலியான பில்கள் மூலம் ரூ.20000 கோடிக்கு மேல் ஜி எஸ் டி மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் ஜி எஸ் டி வரி மோசடி அதிக அளவில் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் அம்மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இச்சோதனை அகமதாபாத், சூரர், ராஜ்கோட், ஆனந்த் மற்றும் பாவ்நகர் ஆகிய இடக்களில் உள்ள 100 நிறுவனங்களில் நடந்தது.
இவற்றில் அகமதாபாத் நகரில் 61 சூரத் நிறுவனங்களிலும், 13 அகமதாபாத் நிறுவனங்களிலும் அதிக அளவில் போலி பதிவுகள் கண்டறியப்பட்டன. இந்த சோதனையின் போது சூரத் நகரில் ஒரு சில பகுதிகளில் உள்ள ஆதார் அட்டைகள் பாவ்நகர், பாலிதானா, அம்ரேலி, அகமதாபாத் மற்றும் ஆனந்த் நகரில் உள்ள போலி நிறுவன ஜி எஸ் டி பதிவுகளுக்கு பயன்படுத்த பட்டுள்ளது தெரிய வந்தது.
குறிப்பாக இந்த ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் பெயரில் தொடங்கப்பட்ட வரிக் கணக்கு மற்றும் பான் எண்கள் பற்றி ஏதும் அறியாமல் இருந்தனர். மேலும் இந்த ஆதார் அட்டைகளில் அவர்கள் கொடுத்து இருந்த மொபைல் எண்களும் அவர்களுக்குத் தெரியாமலே மாற்றப்பட்டு இருந்தன. அதிகாரிகள் பாவ்நகர் மற்றும் பாலிதானா நகரங்களில் உள்ள 50 ஆதார் பதிவு மையங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது இந்த மையங்களில் 2800 ஆதார் தரவுகளில் மொபைல் எண்கள் மாற்றப்பட்டு அவை போலி ஜி எஸ் டி பதிவுகளில் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. இது போல் போலிப்பதிவுகள் குஜராத் மாநிலத்தில் மட்டுமின்றி வேறு பல மாநிலங்களிலும் நடந்துள்ளதும் இந்த சோதனையில் தெரிய வந்தது.
இதுவரை இந்த போலி நிறுவனங்களில் நடந்த தீவிர சோதனைகளில் சுமார் ரூ.20000 கோடி வரை போலி பில்கள் மூலம் ஜிஎஸ்டி மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் மட்டும் ரூ.5000 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்த மோசடியில் 25% குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.