பெங்களூரு

வாக்களித்த மக்களுக்குப் பெங்களூரு உணவகம் தோசை, மைசூர் பாக், பழச்சாறு இலவசமாக அளித்துள்ளது.

நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒட்டுமொத்த கர்நாடகத்தோடு ஒப்பிடுகையில், கடந்த தேர்தல்களில் பெங்களூருவில் குறைந்த அளவே வாக்குப்பதிவு சதவீதம் பதிவானது. எனவே பெங்களூரு வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் அங்குள்ள உணவகங்கள் சலுகைகளை அறிவித்தன.

பெங்களூரு ஹட்சன் சதுக்கத்தில் உள்ள நிச‌ர்கா உணவகம் வாக்களித்தவர்களுக்கு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாகத் தோசை, மைசூர் பாக், தர்பூசணி பழச்சாறு ஆகியவற்றை வழங்கியது.  வாக்காளர்கள் அங்குச் சென்று வாக்களித்ததற்கு ஆதாரமாக தங்களின் மை இட்ட விரலைக் காட்டி உணவை வாங்கி சுவைத்தனர்.  இங்கு முதலில் வந்த 100 வாக்காளர்களுக்கு இலவச திரைப்பட டிக்கெட்டையும் அந்த உணவகம் சார்பில் வழங்கப்பட்ட‌து.

மேலும், பெங்களூரு ஒன்டர் லா கேளிக்கை மைய கட்டண‌த்தில் 15 சதவீத கழிவு வாக்கு செலுத்திய‌வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  மே 12ம் தேதி வரை மட்டுமே இச்சலுகை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் போல நேற்று காலை சாலுக்யா கபே உணவகத்தில் 7 மணி முதல் 11.30 மணிவரை காலை சிற்றுண்டி இலவசமாக வழங்கப்பட்டது. இங்கு 800 பேர் இலவசமாகச் சிற்றுண்டி சாப்பிட்டதாக அந்த உணவகம் தெரிவித்துள்ளது.