ரீம்நகர்

ங்களை அரசியல்வாதிகள் வரி ஏய்ப்பு  செய்யும் மாஃபியாக்கள் என விமர்சித்ததால் கிரானைட் தொழிலதிபர்கள் மூன்று நாள் தொழிலகங்களை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய கிரானைட் கற்களுக்கு ஒரு காலத்தில் நல்ல கிராக்கி இருந்து வந்தது.   குறிப்பாக கரீம்நகர் பகுதியில் இருந்து எடுக்கப்படும் கிரானைட் கற்களுக்குத் தனி மதிப்பு இருந்து வந்துள்ளது.    பல வெளிநாடுகளுக்கு இங்கிருந்து கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் இந்தப் பகுதியில் ஏராளமான கிரானைட் வெட்டும் மற்றும் பாலிஷ் செய்யப்படும் தொழிற்காலைகள் இயக்கி வந்தன.

கடந்த சில வருடங்களாக கிரானைட் ஏற்றுமதி பெருமளவில் குறைந்துள்ளது.   அத்துடன் உள்நாட்டிலும் பொருளாதார வீழ்ச்சியால் கட்டுமான தொழில் கடுமையாக முடங்கி உள்ளது.   இதனால் கிரானைட் தொழில் மிகவும் சரிந்துள்ளது.   தினமும் லட்சக்கணக்கான கன அடி கிரானைட் விற்பனை ஆகும் தொழிலகங்களில் தற்போது 20000 கன அடி கூட விற்பனை ஆவதில்லை.

இந்நிலையில் கரீம்நகர் கிரானைட் தொழிலக உரிமையாளர்கள் சங்கம் மூன்று நாட்கள் தொழிலகங்களை மூடி போராட்டம் நடத்தி வருகின்றன.   இது குறித்து சங்கத் தலைவர் ஸ்ரீதர், “கடந்த சில நாட்களாகவே கிரானைட் தொழில் மிகவும் சரிவை சந்தித்து வருகிறது.   ஆயினும் நாங்கள் எங்கள் தொழிலை மிகவும் நியாயமாக நடத்தி வருகிறோம்.   இந்நிலையில் கரீம்நகரை சேர்ந்த சில அரசியல்வாதிகள் எங்களை வரி ஏய்ப்பு செய்யும் மாஃபியாக்கள் என விமர்சித்துள்ளனர்.

நாங்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகத் தொழில் நடத்தி வருகிறோம்.   எங்கள் தொழில் மூலம் நாட்டுக்கு ஏற்றுமதித் தீர்வை, ஜிஎஸ்டி, உள்ளூர் வரிகள் என கோடிக்கணக்கில் செலுத்தி வருகிறோம்.   அவ்வாறு இருக்க எங்கள் மீது இத்தகைய விமர்சனம் வைப்பதை எதிர்த்து இந்த போராட்டம் நடத்தி வருகிறோம்.

மேலும் எங்கள் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளதால்  எங்களை ஊக்குவிக்க மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.   இதற்காக விரைவில் நாடு தழுவிய போராட்டங்களை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.