திருவாரூர்: பங்குனிஉத்திர பெருவிழா திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் ‘தியாகேசா ஆரூரா’  கோஷத்துடன் ஆழித்தேர் ஆடி அசைந்து வருகிறது.  இந்த தேரானது ஆசியாவிலேயே பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.

நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில்,   தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-வது சிவத்தலம். சப்தவிடங்க தலங்களில் தலைமையானது திருவாரூர் தியாகராஜர் கோயில். இங்கு நடைபெறும் ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழாவின் நிறைவாக நடைபெறும் ஆழித் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான, பெரிய கொடியேற்றம் மற்றும் தினசரி நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில்,  இன்று உலகப்புகழ்பெற்ற ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. ஆழித்தேரில் ஆரூரர் அமர்ந்து உலா வரும் திருக்காட்சி, கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

ஆழித்தேரோட்டத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர்  கூடி உள்ளனர்.  கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஆழித்தேரோட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி வெகு விமரிசையாக ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவில் ஆழித்தேரோட்டத்தினை அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி மற்றும் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் திருமதி.காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பல ஆயிரம் பக்தர்கள் தேர் வடத்தை பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.

தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.