சென்னை: ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கான அரசாணையை  தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கூட்டத்தொடரின்போது கடந்த ஏப்ரல் 22ந்தேதி விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்,  நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் – ஆண்டுக்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும், அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள், சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிக்கு இந்தாண்டு முதல் ‘ உத்தமர் காந்தி விருது’ வழங்கப்படும்  என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, தற்போது, தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,  ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும்.  மேலும்,  சிறப்பாக செயல்படக்கூடிய கிராமங்களை கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒன்று என மொத்தம் 37 கிராம ஊராட்சிகளுக்கு 10 லட்சம் பரிசுத் தொகையுடன் ஆண்டுதோறும் ‘‘உத்தமர் காந்தி’’ விருது, வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  முதல்வரின் அறிவிப்பினால் கிராமசபை கூட்டம் குடியரசு நாள், சுதந்திர நாள், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் நாள், உலக தண்ணீர் நாள், உள்ளாட்சி நாள் என 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் – 6 நாள் கிராமசபை கூட்டம் – உத்தமர்காந்தி விருது! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…