சென்னை: நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் – ஆண்டுக்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும், அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள், சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிக்கு இந்தாண்டு முதல் ‘ உத்தமர் காந்தி விருது’ வழங்கப்படும்  என சட்டப்பேரவையில் 110 விதியில்  கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  இனி ஆண்டுதோறும் உள்ளாட்சி தினம் மீண்டும் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படும் என்றுஅறிவித்துள்ளார்.

மேலும், உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் இனி ஆண்டுதோறும் 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் கிராமங்களை வலிமைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய அதிகாரம் வழங்க வேண்டும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் திட்டங்களை அறிவித்தார்.

சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிக்கு இந்தாண்டு முதல் ‘ உத்தமர் காந்தி விருது’ வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படி தொகை 5 மடங்கு உயர்த்தி வழங்கப்படும் என்றும், அரசின் இந்த அறிவிப்பால் 1.10 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயனடைவார்கள் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.