சென்னை: தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பின், கொரோனாவை கட்டுப்படுத்த படிப்படியாக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவல் 2வது அலை தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தி வருகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அனைவரும் கட்டாயம் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனாலும் கொரோனா தொற்று விகிதம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்பத்தூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், சேலம், திருவாரூர், திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 2 முதல் 5 விழுக்காட்டிற்குள் பதிவாகி உள்ளது.
இந் நிலையில், தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பின், கொரோனாவை கட்டுப்படுத்த படிப்படியாக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாக்குப் பதிவு முடிந்தவுடன் இரவு நேர ஊரடங்கு, பொழுதுபோக்குப் பூங்காக்களுக்கு செல்ல தடை, மத தொடர்பான நிகழ்வுகள், அரசியல் கூட்டங்களுக்குத் தடை என சூழலை பொறுத்து படிப்படியாக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.