புதுடெல்லி: மாதிரி வாடகைச் சட்டத்திற்கு, மத்திய அரசு ஒரு மாதகாலத்தில் அனுமதி வழங்கும் என்றுள்ளார் வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா.
அடுத்த ஒரு ஆண்டிற்குள் இந்த சட்டத்தை மாநிலங்கள் நிறைவேற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, “நாங்கள் வாடகை தொடர்பான சட்டத்தை மாற்றுகிறோம். அடுத்த ஒரு மாதத்தில், இந்த சட்டத்திற்கு உரிய அதிகார வட்டாரத்தால் அனுமதி வழங்கப்படும். இந்த சட்டத்தை அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து மாநில அரசுகளும் நிறைவேற்றுகிறதா? என்பதை எனது அமைச்சகம் உறுதிசெய்யும்.
தற்போதைய நிலையில், பல மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் வாடகைச் சட்டங்கள், வாடகைதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதாய் இல்லை. இந்தச் சட்டத்தின் மூலம், ரியல் எஸ்டேட் தொழில்துறையினர், தங்களின் விற்பனையாகாத சொத்துக்களை வாடகைக்கு விடலாம்” என்றுள்ளார் துர்கா சங்கர் மிஸ்ரா.