சென்னை:
டக நிறுவனங்களில் பணிபுரியும் சான்று வைத்துள்ள அனைத்து நிலை ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்று அரசின் அனைத்து வகையான உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகவியலாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்தது வரவேற்கத்தக்கது என்றாலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் ஊடகவியாளர்களுக்கு மட்டுமே இவ்விதிமுறை பொருந்தும் எனக் கூறப்படுவது ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது என கூறியுள்ளார்.

அரசின் அடையாள அட்டையானது அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் எளிதில் கிடைப்பதில்லை எனவும் இதனால் அவர்களுக்கு அரசு அறிவித்துள்ள எந்த உதவியும் எளிதில் கிடைப்பதில்லை எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றி, அதன் காரணமாகக் கொரோனா பெருந்தொற்றிற்கு ஆளாகி தங்கள் உயிரை இழந்த ஊடகவியலாளர்களுக்கு அரசின் எவ்வித துயர் துடைப்பு உதவியும் கிடைப்பதில்லை எனவும் கூறியுள்ளார்.

எனவே ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் சான்று வைத்துள்ள அனைத்து நிலை ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்று மாத ஊக்கத்தொகை ஐயாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் பத்து லட்சம் ரூபாய் என அரசின் அனைத்து வகையான உதவிகளும் கிடைக்கும் வகையில் விரிவான அறிவிப்பை வெளியிட வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.