சென்னை:
திமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான நடிகையின் புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யபட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மலேசியாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாந்தினி, தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமடைந்தவர்.

இந்த நிலையில், நடிகை சாந்தினி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவரது புகார் கடிதத்தில், ‘நான் மலேசியா குடியுரிமைப் பெற்ற திருமணமாகாத பெண். மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தூதரகத்தில் பணிபுரிந்த போது, அடிக்கடி என் அலுவலக பணிகளுக்காக இந்தியா வந்து செல்வது வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு, அ.தி.மு.க அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், சுற்றுலா வளர்ச்சி துறை சம்பந்தமாக என்னைப் பார்க்க விரும்புவதாக எனக்கு தெரிந்த நண்பர் பரணி என்னிடம் கூறினார். அதனால், நான் அமைச்சரின் இல்லத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நேரில் மணிகண்டனைச் சந்தித்தேன். அன்றைய தினம் சுற்றுலா துறை சம்பந்தமாக என்னிடம் மணிகண்டன் பேசினார்.

மலேசியாவில் தொழில் முதலீடு செய்ய போவதாகவும் அந்த தொழில் முதலீடு சம்பந்தமாக நாம் இருவரும் கலந்து பேச வேண்டும் என்று கூறி என்னுடைய செல்போன் நம்பரைப் பெற்றுக் கொண்டார். அன்றைய தினம் மாலையில் எனக்கு அமைச்சர் மணிகண்டன் போனில் பேசினார். சில தினங்களில் என்னிடம் தனிப்பட்ட முறையில் அமைச்சர் மணிகண்டன் பேச ஆரம்பித்தார். நான் மிகவும் அழகாக இருப்பதாகவும், அவருக்கு என்னை மிகவும் பிடித்து விட்டதாகவும், ஒரு கட்டத்தில் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் என்னிடம் கூறினார். மேலும், அவர் குடும்ப வாழ்வில் அவர் மனைவியால் எந்த சந்தோஷமும் இல்லை என்றும் மனைவி ஒரு கொடுமைக்காரி என்றும், என்னைப் போல ஒரு அழகான பெண் என் இல்லற வாழ்வில் இருந்தால் என்னுடைய வாழ்க்கை மிகவும் அழகாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும் என்று தெரிவித்தார். நாளடைவில் என்னை காதலிப்பதாகவும் கூறினார். நான் அவருடைய காதலை ஏற்க மறுத்தபோது அவர் என்னை சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.

அவர் இவ்வாறு என்னிடம் தெரிவிக்க, அவரின் ஆசை வார்த்தைகளை நம்பி, திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில், இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். சென்னையில் அவர் இருக்க வேண்டிய சூழல் வந்தால், என்னோடு தான் தங்குவார். நான் வெளியில் பர்சேஷிங்கிற்காக செல்ல வேண்டும் என்றால் கூட, அமைச்சரின் காரில் தான் சென்று வருவேன். என் வீட்டிற்கு அருகில் உள்ள அனைவருக்கும் நான் அவருடன் சேர்ந்து வாழ்வது தெரியும். கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்றத்தில் அமைச்சர் மணிகண்டன் பேசியபோது நான் அவருடைய மனைவி என்ற முறையில் சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

கடந்த காலங்களில் காப்பர் டி உள்ளிட்ட கருத்தடை சாதனங்களை வலுகட்டாயமாக என்னிடம் பயன்படுத் தி, பலமுறை உறவு கொண்டுள்ளார். இதனால், நான் பல முறை உடல் நலக் குறைவால் அவதிபட்டிருக்கிறேன். என் வருங்கால கணவர் என்ற ஒரு காரணத்திற்காகவே அனைத்தையும் சகித்துக் கொண்டேன். கடந்த வருடம் என்னை திருமணம் செய்ய வலியுறுத்திய போது, பல முறை கொடூரமாக அடித்து கண்களை சேதப்படுத்தினார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் அவர் சொந்த ஊரில் செட்டில் ஆகிவிட்டார். கடந்த ஆக்ஸ்ட் மாதம் மலேசியாவில் உள்ள எனது பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மலேசியா சென்று, தற்போது தான் தமிழகம் திரும்பி உள்ளேன். இந்த வருடம் திருமணம் செய்து வைப்பதாக மணிகண்டன் உறுதியளித்திருந்தார்.

இந்த சூழலில், புகார் அளித்த பின், செய்தியாளர்களை சந்தித்த நடிகை சாந்தினி, என்னுடன் வாழ்ந்து வந்த மணிகண்டன் கடந்த 15-ம் தேதி சொந்த ஊரில் இருந்து மிரட்டி வருகிறார். ஏன் மிரட்டுகிறீர்கள் என அவரிடம் கேட்டதற்கு, ஒழுங்காக என்னை சொந்த நாட்டிற்கு சென்றுவிடும் படியும், அவ்வாறு நான் செல்லவில்லை என்றால், எனக்கு தெரியாமல் எடுத்த அனைத்து அரை நிர்வாண படங்களையும் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் எனவும் மிரட்டுகிறார். நான் அப்போதும் அச்சமில்லாமல் விளையாடுகிறார் என்ற முனைப்பில் இருந்து வந்தேன். திடீரென என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அரைநிர்வாண புகைப்படத்தை எனக்கு அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். நான் உடனே அந்த போட்டோக்களை அழித்து விடும்படி வற்புறுத்தினேன். மேலும், அதை நான் ஸ்கிரீட் ஸாட் எடுத்து வைத்துள்ளேன். இந்நிலையில், பரணி என்பவர் மூலம் தற்போது கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். என் மீது ,மோசடி வழக்குகள் போடுவதாகவும் மாஜி அமைச்சர் மீது நடிகை சாந்தினி குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த புகார் குறித்து சென்னை மாநகர காவல்துறை தெரிவிக்கையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த புகார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவருகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.