சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதர்ததில் மட்டும் மாநிலம் முழுவதும் சுமார் 2.90 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளி தொடங்கிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஜூன் மாதத்துக்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை முழுமையான கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் நோக்கில் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திமுக அரசு சார்பில், மாணவர்கள் கல்வி பயில காலை உணவு, மதிய உணவு மட்டுமின்றி, நிதி உதவுகளும் வழங்கி வருகிறது. இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு, அதன்படி, மார்ச் 1ந்தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அதன்படி மாணவர்கள் சேர்க்கை தொடங்கிய ஒரு மாதத்தில் சுமார் 2.90 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது, மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை 2,90,601 மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
2024-25-ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் 5.5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தொடக்கக் கல்வி இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்டு மாதம் வரை நடைபெற இருப்பதால், இதுவரை இல்லாத அளவுக்கு மாணவர் சேர்க்கை குறைந்த பட்சம் 5 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பள்ளிக்கல்வித்துறையின் சாதனையாக கருதப்படுகிறது.