த்துக்கோட்டை

ரசுப்பள்ளி மாணவர்கள் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு பிக்பாக்கெட் திருடனை மடக்கி பிடித்துள்ளனர்.

அரிசி வியாபாரி நாராணசாமி கும்மிடிபூண்டி அடுத்த சுண்ணாம்பு குளம் அருகே ஓபசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.  நேற்று முன்தினம் இவர் ஆந்திராவிற்குச் சென்று அங்கு அரிசி விற்பனை செய்து பணத்தை வசூல் செய்து கொண்டு அங்கிருந்து ஊத்துக்கோட்டை  பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து பெரிய பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தவர் அங்கு வந்த ஊத்துக்கோட்டை அரசு  பேருந்தில் ஏறினார்.  பேருந்தில் பள்ளி மாணவர்களின் கூட்டம் அதிமாக இருந்தது. நாராயணசாமியை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்  ஒருவர், கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வியாபாரி அணிந்திருந்த  அரை நிஜார் பாக்கெட்டை பிளேடால் வெட்டி அதிலிருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்துள்ளார்.

நாராயணசாமி  தான் பணம் வைத்திருந்த பாக்கெட்டை கவனித்து அது கிழிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிலிருந்த ரூ. 20 ஆயிரமும் காணவில்லை என்பதால் பணம் திருடுபோய் விட்டதாகக் கத்திக் கூச்சலிட்டுள்ளார்.  பேருந்தில் இருந்தவர்கள் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

அரிசி வியாபாரிக்கு அருகிலேயே பேருந்தில் நின்று கொண்டிருந்த மர்மநபர் மீது அங்கிருந்த ஊத்துக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் அவனைக் கேள்வி மேல் கேள்வி  கேட்டு துளைத்து எடுத்தனர்.  அவன் தான் எடுக்கவில்லை எனப் பதில் கூறியுள்ளான். வாக்குவாதம் முற்றவே சிறிது நேரத்தில் அந்த மாணவர்களை அடிக்கவும், முயற்சி செய்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ஏழுமலை உத்தரவின்படி,  சிறப்பு எஸ்.ஐ. பிரபாகரன் மற்றும் போலீசார் வந்தனர். அந்த மர்ம நபர் போலீசாரை பார்த்ததும் பேருந்திலிருந்து இறங்கி, தப்பி ஓட முயற்சி செய்துள்ளான்.  அங்கிருந்த மாணவர்கள் அவனை மடக்கிப்  பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  போலீஸ் சோதனையில், அரிசி வியாபாரியிடமிருந்து திருடிய ரூ. 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அரக்கோணம் ஜி.என் கண்டிகை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பதும் அவன் ஒரு பிக்பாக்கெட் திருடன் எனவும் தெரிய வந்தது. ஏற்கனவே அவன் மீது கொலை மற்றும் திருட்டு உள்ளிட்ட 3 வழக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இருப்பது தெரியவந்தது.

தனது பணம் கிடைத்ததும் நாராயணசாமி மாணவர்களுக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டார். ஏழுமலை மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி திருவள்ளூர்  சிறையில் அடைத்துள்ளனர்.