டில்லி
அரசு தொலைதொடர்பு நிறுவனங்களான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.74000 கோடி அளிக்க அரசு உத்தேசித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக அரசு தொலை தொடர்பு நிறுவனங்களான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக லேண்ட் லைன் தொலைபேசிகள் மிகவும் குறைந்துள்ளன. பல தனியார் சேவைகளில் தற்போது 4 ஜி வசதி உள்ளது. ஆனால் அரசு நிறுவனமான பி எஸ் என் எல் இன்னும் 4 ஜி சேவையை தொடங்கவில்லை.
அத்துடன் ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அளிக்கும் கட்டணச் சலுகைகளை பி எஸ் என் எல் அளிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் இந்த இரு நிறுவனங்களுக்கும் வருமானம் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் செலவு மிகவும் அதிகமாக உள்ளது. எனவே நஷ்டத்தை குறைக்க அரசு இந்த நிறுவன ஊழியர்களின் ஓய்வு வயதை 60 லிருந்து 58 ஆக குறைக்க உள்ளது.
அத்துடன் விருப்ப ஓய்ப்வு திட்டத்தை அறிவிக்க உள்ள இந்த இரு நிறுவனங்கள் அந்த விருப்ப ஓய்வு திட்டத்துக்கு அளிக்க வேண்டிய ஓய்வூதியத்தை அளிக்க முடியாத நிதிநிலை நெருக்கடியில் உள்ளன. அது மட்டுமின்றி மாதா மாதம் ஊதியம் வழங்கவும் அரசின் தொலைதொடர்பு துறையிடம் இருந்து நிதி கோரும் நிலையில் நிறுவனங்கள் உள்ளன.
எனவே மத்திய அரசு இவ்விரு நிறுவனங்களுக்கும் ரூ.74000 கோடி நிதி உதவியை அளிக்க உத்தேசித்துள்ளது. இந்த நிதி உதவியின் மூலம் விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இழப்பீட்டு தொகை, ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை அதிகரித்து பலரை விருப்ப ஓய்வு கொள்ள தூண்ட உள்ளது. இந்த நிதியின் ஒரு பகுதியில் 4 ஜி சேவை தொடங்க தேவையான செலவுகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.