டில்லி

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரணதண்டனை என்பது தவறு என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடெங்கும் குழந்தைகள் மீது பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது.   அதை பல தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர்.   சட்டப்படி இதற்கான தண்டனை மிகவும் குறைவு என மக்கள் கருதுகின்றனர்.   குழந்தைகளை துன்புறுத்துவோருக்கு  மூன்று வருட சிறைத்தண்டனை,  பாலியல் துன்புறுத்தல் செய்வோருக்கு 5 வருட சிறை தண்டனை, மற்றும் பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு 10 வருட சிறை தண்டனை என்பதே அதிக பட்ச தண்டனையாக தற்போது உள்ளது.

குழந்தைகளுக்கான பாலியல் கொடுமைக்கான அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை  வழங்க வேண்டும் என அலாக் அலோக் ஸ்ரீவத்சா என்னும் வழக்கறிஞர் பொது நல வழக்கு ஒன்றை பதிந்துள்ளார்.  சமீபத்தில் டில்லியில் எட்டு மாதப் பெண் குழந்தையை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   அந்தக் குழந்தைக்கு  தற்போது உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அபாய சிகிச்சைப் பிரிவில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   இந்த நிகழ்வு குறித்தும் இந்த மனு மீதான விசாரணையில் விசாரிக்கப்பட்டது.

அரசு இது குறித்து பதில் அளிக்கையில், “குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம் மிகவும் கொடூரமான குற்றம் என்பதை அரசு ஒப்புக் கொள்கிறது.  அதே நேரத்தில் மரண தண்டனை என்பது எந்தக் கொடுமைக்கும் தீர்வாகாது.” எனத் தெரிவித்துள்ளது.   மேலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட எட்டு மாதக் குழந்தையின் பெற்றோருக்கு ரூ.75000 இடைக்கால நிவாரணம் வழங்கி உள்ளதாக கூறி உள்ளது.

இதற்கு நீதிமன்றம், “இது போன்ற நிகழ்வு மிகவும் கொடூரமான குற்றம் என ஒப்புக் கொள்ளும் அரசு இடைக்கால நிவாரணம் என்பது தீர்வாகாது என்பதை உணர வேண்டும்.   ஒரு பெண் குழந்தையிடம் இது போல கொடூரம் நிகழும் போது அவளுடைய மனத்துயரம் எளிதில் நீங்காது.  அந்த பயமும் துக்கமும் என்றும் தொடரும்.    இது போல நிகழ்வுகள் மேலும் நிகழாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை’ என தெரிவித்துள்ளது.