டெல்லி: கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக ரூ.3000 கோடியில் ‘கோவிட் சுரக்சா திட்டத்தை’  மத்திய அரசு  செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தொற்று பரவல்  அதிகரித்து வருகிறது. தமிழகம், மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் அதிகரித்து வரும் தொற்று பரவலால், உலகில் 3வது இடத்தில்  உள்ளது. அதே வேளையில் தினசரி தொற்று பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தடுப்பூசிகள் கண்டு பிடிக்கும் பணியில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. இதுவரை பல கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன.  அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான், புழக்கத்துக்கு வரும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக ரூ.3,000 கோடியில் ‘கோவிட் சுரக்சா திட்டம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், இந்தியாவில் சுமார் 30 நிறுவனங்களின்  தடுப்பூசிகள் சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் பாரத் பயோடெக், ஐசிஎம்ஆர் இணைந்து உருவாக்கிய கோவாக்ஸின் தடுப்பூசி, ஜைடஸ் கேடில்லா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பூசி போன்றவைகளின் சோதனையில்  நல்ல முன்னேற்றம் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக,  கொரோனா தடுப்பூசி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில்,  ‘கோவிட் சுரக்சா திட் டத்தை” ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில், செயல்படுத்த மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின்மூலம் குறைந்தபட்சம் 6 தடுப்பூசிகளை சந்தையில் விரைவாக அறிமுகம் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாகவும், அதற்கான காலக்கட்டம்,  12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு சிறப்பான கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டில், கொரோனா தடுப்பூசி தராளமாகக் கிடைக்க வழிவகை செய்யும் நோக்கில் இந்த திட்டத்தை மத்தியஅரசு செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.