திருப்புவனம்

முதல்வரின் உத்தரவுப்படி காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதாரருக்கு அரசுப்பணி வழக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். கடந்த  ஜூலை 27-ம் தேதி அக்கோயிலுக்கு சாமி கும்பிட மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் காரில் வந்து திரும்பி வந்தபோது, பையில் வைத்திருந்த 10 பவுன் நகை. ரூ.2,500 காணவில்லை என புகார் தெரிவித்தார்.

அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரிடம் திருப்புவனம் போலீஸார் விசாரித்து பின்னர் . மற்றவர்களை விடுவித்து அஜித்குமாரை மட்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் வெளியே அழைத்துச் சென்று விசாரித்தனர். கடந்த ஜூன் 28-ம் தேதி போலீஸார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்   தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இது குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஐஜி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் அஜித்குமாரின் உடலில் 40-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும், ரத்தக் கசிவு இருந்ததும் தெரியவந்ததால் அன்று இரவே இது கொலை வழக்காக மாற்றப்பட்டு, தனிப்படை ஓட்டுநர் ராமச்சந்திரனை தவிர்த்து காவலர்கள் மற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் உடனடியாக விசாரணையை தொடங்க உத்தரவிட்டதையடுத்து நேற்று திருப்புவனம் வந்த அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிவகங்கை மாவட்ட போலீஸார் ஒப்படைத்தனர். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்தும், எஸ்பி ஆஷிஷ் ராவத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும் அரசு உத்தரவிட்டது.

அஜித்குமாரின் தாயார், சகோதரரிடம் முதல்வர் ஸ்டாலின் செல்போன் மூலம் பேசி, தனது வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

நேற்று அஜித்குமாரின் தாயார் மாலதியை அவரது வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முதல்வரின் உத்தரவின்படி 3 சென்ட் இலவச வீட்டுமனைப் பட்டாவையும் சகோதரர் நவீன்குமாருக்கு ஆவின் நிர்வாகத்தில் டெக்னீஷியன் பணிக்கான ஆணையையும், திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியையும் வழங்கியுள்ளார்.