Govt Issues Circular For Third Gender People To Use Toilet Of Their Choice At Public Places

மூன்றாம் பாலினத்தவர் விரும்பினால் பொதுக்கழிப்பிடங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொதுக்கழிப்பிடங்களை, மூன்றாம் பாலினத்தவர் விரும்பினால் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் படி, மூன்றாம் பாலினத்தவர் பொதுக்கழிப்பிடங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாம் பாலினத்தவர் அனைவரும் இந்த நாட்டில் உள்ள அனைவரையும் போல சம உரிமை உள்ள குடிமக்கள் என்ற அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகத்தின் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 204ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் மூன்றாம் பாலினத்தவருக்கு அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பொதுக்கழிப்பிடங்கள் கட்டித்தர வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், மைசூரில் மட்டுமே மூன்றாம் பாலினத்தவருக்கு என தனிக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றமும், சென்னையில் மூன்றாம் பாலினத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில்  தனிக்கழிப்பிடங்கள் கட்டித்தர வேண்டும் என தமிழக அரசுக்கு வழிகாட்டுதல் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் பத்துலட்சம் மூன்றாம் பாலினத்தவர் வசிப்பதாக கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது. மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு, மூன்றாம் பாலினத்தவருக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதில் முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது. ஏராளமான சமூகநல ஆர்வலர்கள் மத்திய அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.