ஈரோடு:

நீட் போன்ற  போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளை அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில்,  மாநில அளவில், முதுநிலை ஆசிரியர்களுக்கான  பயிற்சி முகாம் ஈரோட்டில் நடைபெற்றது.

இந்த  முகாமில் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.. அவர்களுக்கு தேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு நீட், ஜேஇஇ, பட்டயக் கணக்காளர் மற்றும் திறனறித் தேர்வுகள் என அனைத்துக்கும் மாணவர்களைத் தயார் செய்யும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இந்த முகாமை தொடங்கி வைத்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.   மாவட்டத்துக்கு 10 முதுகலை ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 320 ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது என்று கூறினார்.

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  “பின்லாந்து போன்ற வெளிநாடுகளில் தொழில்சார்ந்த கல்வி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. 2 வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால், 6 வயது ஆன பிறகுதான் கல்வியைக் கற்றுத் தருகின்றனர். அதுவரை அந்த மாணவர்களுக்கு உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல நெறிமுறைகள் போன்றவற்றைக் கற்றுத் தருகின்றனர்.

அதுபோல, அங்குள்ள பள்ளி மாணவர்கள் 9-ம்வகுப்பு படிக்கும்போதே தொழில் திறன்சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 18 வயதுக்குப் பிறகு தங்கள் பெற்றோர் உதவி இல்லாமலே, வாழ்க்கை நடத்துமளவுக்கு அங்கு கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன என்று கூறினார்.

இதுபோன்ற நவீன முறைகள், முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, வெளிநாடுகளின் பாணியில் தமிழக கல்விமுறையிலும்  மாற்றங்கள் கொண்டு வரப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் பணிகளை ஆற்ற வேண்டும். ஆசிரியர்கள் வேலை நாள்களில் போராடக் கூடாது என்பது அரசின் வேண்டுகோள்.

தற்போதைய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு 240 நாள்கள் கற்றுத்தர வேண்டியுள்ளது. ஆனால், 210 நாள்கள்தான் பள்ளிகள் நடைபெறுகின்றன.  இதில் 18 நாள்கள் ஆசிரியர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்குகிறோம். கற்பிக்கும் நாள்கள் குறையும்போது, மாணவர்களின் கல்வி பாதிக்கப் படும் என்பதை ஆசிரியர்களும் உணர்ந்து அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.

மேலும், பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ஐ.சி.டி) திட்டத்தின் கீழ், 9 முதல் 12 வரையிலான அனைத்து வகுப்புகளும் இணைய வசதியுடன் கணினி மயமாக்கப்படும் என்றும், மத்திய உதவியுடன் 70,000 கரும்பலகைகள் ஸ்மார்ட் போர்டாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.