சென்னை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு, அரசு கொடுத்த வீட்டுமனை பட்டாவால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ள அஜித்குமாரின் தம்பி நவீன்குமார், தனக்கு அரசு வழங்கியுள்ள ஆவின் வேலை திருப்புவனத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எனவும், மதுரையில் ஏதேனும் ஒரு அரசுத் துறையில் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற நிகிதா, தனது தங்க நகை காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் உள்பட சிலரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஜுன் 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்ற அஜித்தை போலீசார் கடுமையாக தாக்கி கொலை செய்தனர். இது பிரோத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளின் அடிப்படையாக கொண்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசையும் காவல்துறையை கடுமையாக சாடினர். இதையடுத்து, அஜித் குடும்பத்தினரின் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார்.
அதன்படி, அஜித் குடும்பத்துக்கு வீட்டு மனை பட்டா மற்றும் அவரது தம்பிக்கு அரசு பணி உத்தவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கின் விசாரணைக்காக மதுரை வந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ”திருப்புவனம் காவல் நிலையத்தில் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் தரப்படுவதாக குற்றம் சாட்டியவர், அதற்காக உரிய பாதுகாப்பு கேட்டுள்ளோம் என்று கூறினார். மேலும், தமிழ்நாடு அரசு தரப்பில், தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆவின் வேலை, திருப்புவனத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகையால் அருகில் உள்ள மதுரையில் ஏதேனும் ஒரு அரசுத் துறையில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். இது குறித்து நான் வேண்டுகோள் வைத்துள்ளேன் ஆனால் இதுவரை எந்தவித பதிலும் அரசு தரப்பில் இருந்து வரவில்லை என்றவர்,
தமிழ்நாடு அரசால் எங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா அமைந்துள்ள இடம், வளர்ச்சி அடையாத பகுதி. ஆகையால் இந்த ஒதுக்கீடு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவித்தவர், வீட்டுமனை என்பதை விட சித்திரவதையால் இறந்து போன எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள். தற்போது இந்த வழக்கில் உள்ள முக்கியமான சாட்சியங்களுக்கு பாதுகாப்பு அளிக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, வரவேற்கத்தக்கது” என்றார்.