டெல்லி: மோட்டார் வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அக்டோபர் 31ந்தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக வாகனப் பதிவு உள்பட வாகனங்கள் தொடர்பான ஆவனங்களின் செல்லுபடியாகும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ,காலாவதியாகும் வாகனப்பதிவுச் சான்றிதழ் (ஆர்.சி.), லைசென்ஸ், தகுதி சான்று, அனுமதி தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என முதன்முதலாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியிருந்தது. பின்னர், அவ்வப்போது காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக செப்டம்பர் 30ந்தேதியுடன் அவகாசம் முடிவடையாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாதம் கால அவகாசத்தை மத்தியஅரசு நீட்டித்து உள்ளது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், தற்போதைய கொரோனா சூழலை கருத்தில்கொண்டு, வாகனங்களுக்கான ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை ஆக்டோபர் 31ஆம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளது.
மோட்டார் வாகன சட்டம், 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 ன் கீழ் அனைத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகனப்பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம். புதிய திட்டத்தின்படி வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்து இருந்தால் 62 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையோ 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையோ இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.