சென்னை

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின ஊர்வலத்தில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்படவில்லை என அர்சு விளக்கம் அளித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இவற்றில்ல் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும்.

வரும் 2025 ஜனவரி 26 ஆம் தேதி, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுக்க உள்ளன. ஆனால் இந்த பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. இது குறித்து, தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

தமிழக அரசு

“குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று வதந்தி பரப்பப்படுகிறது” என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்து இருப்பதாவது;

“2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க இயலாது.

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது.

2024 அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது. வதந்தியைப் பரப்பாதீர்!”

என விளக்க,ம் அளித்துள்ளது.