சென்னை:
அரசு மருத்துவர்கள் போராட்டம் இன்று 8வது நாளை எட்டிய நிலையில், போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடுக்கப்பட்ட பணிமுறிவு உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை நிரப்புதல், பட்ட மருத்துவ மேற்படிப்பில் மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு, பட்ட மேற்படிப்பு அரசு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்துதல் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த அக்.25 ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் கோரிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும், போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்தது. மேலும், போராட்டத்தை கைவிடவில்லை என்றார், அவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று காலையில் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்படுவதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “முதல்வரின் கோரிக்கையை ஏற்று இன்று காலை வரை பணிக்கு திரும்பிய அரசு மருத்துவர்கள் அனைவருக்கும் முதல்வரின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
போராட்டத்தை வாபஸ் பெற்றதால் அரசு மருத்துவர்களுக்கு எதிரான பிரேக் இன் சர்வீஸ் திரும்பப் பெறப்படுகிறது- முதல்வரின் ஆணைப்படி அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பணிமுறிவு உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. முதல்வர் உறுதியளித்தபடி, அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்கும்,” என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.