நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளர்.

அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் சாமந்தான் பேட்டையில் இயங்கி வருகிறது. சுனாமியால் தாய் அல்லது தந்தையர் இழந்தவர்கள் காப்பகத்தில் படிக்க வைக்கப்பட்டு வருகின்றனர். காப்பகத்தில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 5 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ் கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கும்போது பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.

இது குறித்து விடுதி கண்காணிப்பாளர் சசிகலா கொடுத்த புகாரின் பெயரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் வேம்பரசன் மன நல ஆலோசகரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி ” குழந்தைகள் காப்பகத்தில் பெண் மனநல ஆலோசகரை நியமிக்க நடவடிக்கை எடுத்து, குழந்தைகளுக்கு உரிய கவுன்சிலிங் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.