சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், அரசுப் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர் போக்குவரத்து கழக அதிகாரிகள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது; தமிழகத்தில், பெரும்பாலான பகுதிகள் இன்னும் பச்சை மண்டலப் பகுதிகளாக மாறவில்லை. இந்நிலையில், பச்சை மண்டலப் பகுதிகளில் மட்டும் நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலை ஏற்படும்.
பொதுப் போக்குவரத்துக்காக, அரசு பேருந்துகளை இயக்குவதில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடிக்கும். நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயங்கும் தொழிற்சாலைகளுக்கு, வாடகை அடிப்படையில் 100 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வகையில், அரசுப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
அரசின் உத்தரவுகளை மதித்து முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே பேருந்துகளை இயக்க உள்ளோம்.
தமிழக அரசு எப்போது பொதுப் போக்குவரத்தை அனுமதித்தாலும், தடையின்றி சிறப்பாக இயக்கும் வகையில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று கூறினர்.