டில்லி

கொரோனா முதல் அலைக்குப் பிறகு அரசும் மக்களும் அலட்சியப் போக்கை அடைந்து விட்டதாக ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்தியாவில் தினசரி பாதிப்பு 3.25 லட்சத்துக்கும் அதிகமாகி உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.   இதுவரை 2.44 கோடி பேர் பாதிக்கப்பட்டு சுமார் 2.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். நேற்றுவரை 2.04 கோடி பேர் குணம் அடைந்து 36.69 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனை படுக்கைகள் தேவை அதிகரித்துள்ளன.   தேவைக்கேற்ப அளவுக்கு இவை அதிகரிக்கப்படாததால் மிகவும் அதிகமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இது குறித்து பலரும் அரசைக் குறை கூறி வருகின்றனர்.  அவ்வகையில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் இது குறித்து அரசை விமர்சித்துள்ளார்.

இன்று மோகன் பகவத், “ஏற்கனவே கொரோனா முதலாம் அலையால் மக்கள் பெரிதும் துயருற்று இருந்தனர்.   அப்போதே கொரோனா இரண்டாம் அலை குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.   ஆனால் கொரோனா முதலாம் அலைக்குப் பிறகு மக்கள், அரசு, மற்றும் நிர்வாகத்தினர் அனைவரும் அலட்சிய மனப்போக்கை அடைந்து விட்டனர்.  இதனால் தற்போது கடும் அவதி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மூன்றாம் அலை தாக்குதல் உள்ளதாக எச்சரிக்கை விடப்படுகிறது.  அது மேலும் கடுமையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.  நாம் அதற்காகப் பயப்படுவோமா அல்லது வைரஸை வெற்றி கொள்ளும் வகையில் சரியான திசையில் பயணித்துப் போரிடுவோமா? இனியாவது நாம் எதிர்கால அபாயத்தைக் குறித்து சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை மனதில் கொள்ளாமல் இந்திய மக்கள் ஆக்கப்பூர்வமாக அதை எதிர்த்து போடாட வேண்டும்.  இவ்வாறு இன்றைய தவறுகளைச் சரி செய்வதன் மூலம் மூன்றாம் அலையின் போது இவ்வளவு இழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். ” எனத் தெரிவித்துள்ளார்.