கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில், சிதம்பரம் மாவட்டம், கடலூரில் அமைந்துள்ளது.
கைலாயத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக ஆனந்த நடனமாடினர். நடனம் முடிந்ததும் தங்களில் யார் நன்றாக ஆடியது என அவர்களுக்குள் சந்தேகம் எழுந்தது. பிரம்மாவிடம் தங்களின் சந்தேகத்தைக் கேட்டனர். அவரால் சரியாக தீர்ப்பு சொல்ல முடியவில்லை. எனவே இருவரும் தங்களுக்கு தீர்ப்பு சொல்லும்படி மகாவிஷ்ணுவிடம் கேட்டுக்கொண்டனர்.
மகாவிஷ்ணு தேவசிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு ஒரு சித்திரை சபையை அமைத்து, அதில் நடன போட்டியை வைத்துக் கொள்ளும்படி கூறினார். சிவனுக்கும், பார்வதிக்கும் நடனப்போட்டி ஆரம்பமானது. சிவன் தன் தாண்டவங்கள் அனைத்தையும் ஆடிக்காட்டினார். பார்வதிதேவியும் சலிக்காமல் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினார்.
ஒருவரை ஒருவர் மிஞ்சும்படி இருவரும் ஆடிக்கொண்டிருக்க இறுதியில் தன் வலக்காலைத் தூக்கி தலைக்கு மேலே நிறுத்தினார் சிவன். பார்வதியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை. எனவே, சிவனே வெற்றி பெற்றதாக அறிவித்தார் மகாவிஷ்ணு . பின் சிவன் இங்கு நடராஜராகவே எழுந்தருளி, மகாவிஷ்ணுவையும் இங்கேயே தங்கும்படி கூறினார். விஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் தங்கினார்.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 41 வது திவ்ய தேசம். மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால், இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான இங்கு “மகாவிஷ்ணு ஆகாயத்தை பார்த்தபடி” இருப்பது சிறப்பு.
வேண்டிக்கொண்ட செயல்களில் வெற்றிபெற, நீதி தவறாமல் இருக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.