சென்னை,

ந்த ஆண்டு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் பன்வாரிலால் உரையுடன் சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கவர்னர் தனது உரையை வாசிக்க தொடங்கி னார். அப்போது வணக்கம், புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறி உரையை வாசிக்க ஆரம்பித்தார். திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் தனது உரையை ஆற்றத்தொடங்கினார். கவர்னர் உரையில் உள்ள முக்கிய அம்சங்கள் விவரம்:

ஜிஎஸ்டி வரிமுறை மாற்றத்தை சிக்கலின்றி நடைமுறைப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு,

மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது,

மத்திய அரசு தமிழகத்தில் மத்திய நிதியுடன் கூடிய பல திட்டங்களுக்கான நிதியைக் குறைத்திருக்கிறது,

கடற்படை, கடலோரக் காவல்படையுடன் இணைந்து தமிழக அரசு ஒக்கி புயல் மீட்புப் பணிகளை மேற்கொண்டது,

ஒக்கி புயல் பாதிப்பு தொடர்பாக பார்வையிட வந்த பிரதமர் மோடிக்கு நன்றி,

சுகாதாரம், கல்வி, குழந்தைகள் நலம் போன்ற சமூக நலத் திட்டங்களுக்கு தமிழக அரசு பெரும் தொகையை செலவிடுகிறது,

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்விருக்கை அமைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு,

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

கடந்த  2016 -17ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.2,478 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு வாங்கும் விவசாயிகளின் எண்ணிக்கையை உயர்த்த அரசு நடவடிக்கை.

திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மாநகரங்கள் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

அம்ருத் திட்டத்தின் கீழ் 33 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது  அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.951 கோடியை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதியுதவியாக விடுத்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல். மேலும் கோதாவரி உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பிவிடுவது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு பாராட்டு.

கவர்னர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்து முடிந்ததும், சபாநாயகர் அந்த உரையை தமிழில் வாசித்தார்.