சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் அளிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சட்டப் பேரவையில் நிறைவேற்றபட்பட்ட மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது உண்மையல்ல என ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் செய்து வருவதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரானவை என்றும் பொதுவெளியில் மக்கள் மத்தியில் சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு அக்டோபர் 31 ஆம் தேதி வரையில் வரப்பெற்ற மசோதாக்களில், 81 சதவீதம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் 95 சதவீதம் மசோதாக்கள் 3மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் 13 சதவீதம் மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அந்த மசோதாக்களிலும் 60 சதவீதம் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது.
2025 அக்டோபர் கடைசி வாரத்தில் பெறப்பட்ட மசோதாக்கள் பரிசீலனையில் உள்ளன. தமிழ்நாடு சட்டப் பேரவையில் 18.9.2021 முதல் 31.10.2025 வரையில் 211 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 170 மசோதாக்களுக்கு சட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு வாரத்திற்குள்ளாக 73 மசோதாக்களுக்கும், ஒரு மாத்திற்குள் 61 மசோதாகளுக்கும், 3 மாதத்திற்குள் 27 மசோதாக்களுக்கும், 9 மசோதாக்களுக்கு 3 மாத்திற்கு மேல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 27 மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் மாநில அரசின் வேண்டு கோளின் பேரில் 16 மசோதாக்கள் உள்ளன. மேலும் 4 மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும் மாநில அரசு 2 மசோக்கள் திரும்ப பெற்றுள்ளது. 8 மசோதாக்கள் 2025 அக்டோபர் கடைசி வாரத்தில் பெறப்பட்டு ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது.
பொது வெளியிலும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பும்போது அதன் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநர் தடுத்து நிறுத்தியதுடன், அதன் முடிவை அரசாங்கத்திற்கும் தெரிவித்தோம். அந்த மசோதாக்கள் மீண்டும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது.
அந்த மசோதாக்கள் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளுக்கு முரணாக இருந்ததால், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு என எழுதி ஆளுநர் அவற்றை ஒதுக்கி வைத்தார். மேலும் பாராளுமன்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாக கருதப்பட்டது. தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும் உரிய விடாமுயற்சியுடன் ஒவ்வொரு மசோதாவையும் தமிழ்நாடு ஆளுநர் ஆய்வு செய்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி ஆளுநர் எப்போதும் கண்டிப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும், எந்தவொரு அரசியல் பரிசீலனைகளையும் பொருட்படுத்தாமல், முழுமையான நியாயம், விடாமுயற்சி மற்றும் ஜனநாயக செயல்முறைகளுக்கு மரியாதை அளித்து, அரசியலமைப்பின் கீழ் அனைத்து சட்டங்களும் அரசியலமைப்பிற்கு இணங்குவதை உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளார்.
தமிழக மக்கள் மீது மிகுந்த மரியாதையை ஆளுநர் கொண்டுள்ளார். மேலும், தமிழ் பாரம்பரியம், கலை மற்றும் இலக்கியத்தை முன்னிலைப்படுத்தும் ஆன்மீக, கலாச்சார மற்றும் மொழியியல் முயற்சிகளையும் ஆளுநர் ஆதரித்து வருகிறார். தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஆளுநரின் ஆழ்ந்த மரியாதையை வலுப்படுத்தி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
