சென்னை: ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்வதை முதலமைச்சர் ஸ்டாலின் தவிர்த்த நிலையில், திமுக அமைச்சர்கள்  மற்றும்  அதிமுக, பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

குடியரசு தினத்தையொட்டி வழக்கமாக நடைபெறும் , ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து  நேற்று மாலை  ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள  முதல்வர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், , திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தன. ஆனால், ஆளும் அரசு என்பதால் திமுக கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருந்தாலும், முதலமைச்சர் ஸ்டாலின் விசிக மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக கூறி ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்தார். அதற்கு பதிலாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோரை அனுப்பி வைத்தார். மேலும், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபிசங்கர் ஜிவால் உள்பட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பாலகங்கா, பாமக சார்பில் ஜி.கே.மணி, பாஜக சார்பில் தேசிய மகளிர்அணி தலைவர் வானதி சீனிவாசன், கரு.நாகராஜன் மற்றும் ஆற்காடு இளவரசர் உள்ளிட்ட பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

விருந்தின் போது, சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விருதுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்பு, திருவண்ணாமலை ஜி.மதன்மோகன், சென்னை எம்.குபேந்திரன், தேனி என்.ரஞ்சித்குமார் ஆகியோருக்கு சமூக சேவை விருதும்,

மதுரை பசுமை அமைதிக்காதலன் அமைப்பு, தருமபுரி ஜி.தாமோதரன்,திருநெல்வேலி சி.முத்துகிருஷ்ணன், விருதுநகர் வி.தலைமலைக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதும் வழங்கப்பட்டது.