டெல்லி:
ளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென நேற்று இரவு அறிக்கை மூலம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே தமது டிஸ்மிஸ் அறிக்கையை நிறுத்தி வைப்பதாகவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர் ரவியின் இந்த குழப்பமான நடவடிக்கை நாடு தழுவிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி எம்.பி. கூறுகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உடனடியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமக்கான அதிகார வரம்பு எது என்பது தெரியவில்லை. ஒரு ஆளுநர் என்பவர் இத்தகைய அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளவே கூடாது. இப்படியான நடவடிக்கைகள் மூலம் அரசியல் சாசனம் தமக்கு என்ன அதிகாரம் கொடுத்துள்ளது என்பதை அறியாமல்தான் ஆளுநராக இருக்கிறார் ரவி என்பது தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.