புதுச்சேரி

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால் புதுச்சேரி துணை மாநில ஆளுநர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாகப் புதுச்சேரியில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது.   இங்கு நேற்று 73  பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இவர்களில் புதுவையில் 48 காரைக்காலில் 15 மற்றும் மாகேவில் 10 பேர் உள்ளனர்.   இதுவரை 10,32,254 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  இன்னும் 3 லட்சம் பேர் மட்டுமே பாக்கி உள்ளனர்.

தற்போது புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.  இதையொட்டி இன்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜீவ்காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றார். குழந்தைகள் சிகிச்சைப் பிரிவைப் பார்வையிட்ட அவர், டெங்கு மேலாண்மை குறித்து ஆய்வு செய்தார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம், “கொசுக்கடியால் மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பிருக்கிறது.  பொதுவாகக் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் கூடும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது டெங்கு காய்ச்சலுக்கு நடைபெற்று வரும் சிகிச்சை, எதிர்காலத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடினேன்.

கடந்த 10 ஆண்டுகளாகப் புதுச்சேரியில் உயிரிழப்புகள் இல்லை என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. டெங்கு பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள் நலமடைந்து வருகிறார்கள். குழந்தைகளின் டெங்கு சிகிச்சைக்கு 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.  இவை தேவைப்பட்டால் இன்னும் அதிகரிக்கப்படும்.

பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை மற்றும்  உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கொசு உற்பத்தியைத் தடுக்க குப்பைகளை அப்புறப்படுத்தி வருவதைக் கண்காணித்து வருகிறேன். மருத்துவமனைகள் டெங்கு சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன. இவை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தேவையான மருந்துகளை இருப்பு வைத்திருக்கின்றன” எனத் தெரிவித்தார்.