சென்னை:  தமிழ்நாட்டின் 35வது அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார் அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 7 மே 2021 அன்று பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களில் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சராக இடம்பெற்றிருந்த 30 பேர் அமைச்சர்களாக இருந்தனர். தமிழகத்தின் 21வது முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றார்.  ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு 400 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்காக பிரமாண்டமான முறையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவுக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின், தாத்தா கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், பாட்டி தயாளு அம்மாள் உள்பட குடும்பத்தினரிடம் ஆசி பெற்றார். அதைத்தொடர்ந்து,கிண்டி ஆளுநர் மாளிகைக்கு உதயநிதி ஸ்டாலின் வருகை மற்றுட்ம முதல்வர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினரும் ஆளுநர் மாளிகைக்கு வருகை  தந்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர்களும் வரிசையாக வந்தனர்.

இதையடுத்து பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பதவி ஏற்பு விழாவில் திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்பட அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள், மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக உதயநிதி பதிவிட்டுள்ள டிவிட்டில், எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.