சென்னை: ஆளுநர் தமிழ்நாட்டை விட்டும் வெளியேற வேண்டும் , ஆளுநரின் நடவடிக்கை தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் கரும்புள்ளியாக மாறிவிட்டது என தமிழக அரசியல் கட்சி தலைவர்களான டிடிவி.தினகரன், முத்தரசன், பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரைக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்தது. இதனால், ஆளுநர் ரவி உரையின்போது, திராவிட மாடல் என்ற வார்த்தை உள்பட தலைவர்களின் பெயரையும் வாசிக்காமல் தவிர்த்தார். இதை கண்டித்து, முதலமைச்சர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேசியதும், சட்டப்பேரவை நிகழ்வில் பாதியிலேயே , தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து ஆளுநர் வெளியேறி விட்டார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாக மாறிவிட்டது. ‘ ஆளுநர் உரையைத் தயாரித்து அதனை இறுதி அச்சுக்கு அனுப்புவதற்கு முன்பே இந்தக் கருத்து வேறுபாடுகளை ஆளுநர் மாளிகையும், தமிழக அரசும் சரிசெய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் சட்டப்பேரவையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் இன்று அரங்கேறியிருக்கின்றன.
அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆளுநர் பதவி என்பது தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைபாடும். அதே நேரத்தில், அரசியல் சட்டப்படி, அந்த பதவி இருக்கும் வரை அதிலிருப்பவருக்கு அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டியதும் அவசியம்.
இதைப்போன்றே, மரபுகளை உடைத்துவிட்டு, சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டதும் சரியானதல்ல. ஆளுநருக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே தொடரும் இத்தகைய மோதல்போக்கு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு மக்களுக்கும், மாநிலத்துக்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தும் எனபதிவிட்டுள்ளார் டிடிவி.தினகரன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் குறிப்பு அறிக்கையை ஆளுநர் படிக்க வேண்டியது அவரது பொறுப்பு. ஆளுநர் ஆங்கிலத்தில் படிப்பதை, பின்னர் பேரவை தலைவர் தமிழில் படிப்பார். இதுதான் சட்டபேரவையின் மரபு.. அமைச்சரவை தயாரித்து கொடுத்த கொள்கை அறிக்கையை அப்படியே முழுமையாக வாசிக்க வேண்டும் என்பது ஆளுநரின் பொறுப்பும் கடமையும். நாடு சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும், எந்த ஒரு ஆளுநரும் செய்யாத ஒரு தீஞ்செயலை ஆளுநர் ரவி செய்திருக்கிறார். இது மிகக் கடுமையான கண்டனத்திற்குரியது. தனக்கு வேண்டியதை வாசிப்பது; வேண்டாததை விட்டுவிட்டு புறக்கணிப்பது ஆகிய செயல்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது..
ஆளுநரைக் கண்டித்து இதே பேரவையில் தீர்மானம் போட வேண்டும். இப்படி அமைச்சரவையின் குறிப்பை விட்டுவிட்டு படிப்பது ஆளுநரின் வரம்புக்கு மீறிய செயல். இது மிக மிக கடுமையான கண்டனத்திற்குரியது. இது ஒரு கட்சியின் பிரச்சனை அல்ல; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்குமானது; அந்த கட்சி களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்குமேயானால், இதற்கு கடுமையான முறையில் தங்களது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். ஆளுநர் இவ்வாறு செயல்பட்டதற்கு தமிழ்நாடு மக்களிடம் பகிரங்கமாக, உடனடியாக , நிபந்தனையற்ற முறையில் மன்னிப்புக் கோர வேண்டும். அவர் நினைப்பதெல்லாம் இங்கே செய்து கொண்டிருக்க முடியாது; அப்படி மன்னிப்பு கோரவில்லை என்றால், கடுமையான எதிர்விளைவுகளை ஆளுநர் சந்திக்க வேண்டிய நிலைமை நிச்சயமாக ஏற்படும். ” என்று கூறியுள்ளார்.
ஆளுநரின் செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள கே.,பாலகிருஷ்ணன், ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் பேசியுள்ளார. அரசின் கொள்கை உரையே அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும் என்பது சரியான, வரவேற்க வேண்டிய முடிவு.
தமிழ் நாடு முதலமைச்சரின் இந்த நடவடிக்கை சட்டமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராதது. அரசியல் சாசன வரம்பினை மீறி தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது பொறுத்தமான பதிலடி. முதலமைச்சரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆளுநர் அவையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியுள்ளார். தேசிய கீதத்தை புறக்கணித்து அவமதித்துள்ளார். எதிர்க் கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல், மிகுந்த கண்டனத்திற்குரியது.
அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான் தமிழ் நாட்டின் விருப்பம். சட்டமன்றத்தில் எழும்பிய முழக்கம், தமிழ் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும்.ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில், அனைத்து கட்சிகளும் இணைந்து நிற்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.