சென்னை: தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவைஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் வழங்காமல் இன்று திருப்பி அனுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும் மீணடும் நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2021ம்ஆண்டு செப்டம்பர் 13ந்தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவ படிப்புகள் மற்றும் மேல் படிப்புகளில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு அன்று மாலை நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்திருந்தது. இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும்படி, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநரிடம் வலியுறுத்தினார். மேலும், இது தொடர்பாக குடியரசு தலைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இது மட்டுமின்றி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், தமிழ்நாடு எம்.பி.க்கள் நேரில் சந்தித்து, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும்படி வலியுறுத்தினர்.
இதுமட்டுமின்றி ஜனவரி 31ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரின்போதும், நீட் விலக்கு மசோதாவுக்கு அனுமதி கோரி தமிழக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்க்மல் திருப்பி அனுப்பி உள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீட் விலக்கு மசோதா மாணவர்கள் நலனுக்கு எதிரான சட்ட மசோதா என்ற விளக்கத்துடன், நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய வலியுறுத்தியும், ஆளுநர் மாளிகை பிப்ரவரி 1-ம் தேதி சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது.
இந்த விவகாரம் இன்றுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது! ஆர்டிஐ கேள்விக்கு கவர்னர் மாளிகை பதில்…