சென்னை: தமிழ்நாடு அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் திருத்த மசோதாகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பேரதிர்வை ஏற்படுத்தியது. அதுபோல மேலும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக தமிழ்நாடு அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட திருத்தம் மசோதா தாக்கல் செய்தார்.
ஜனவரி 10-ந்தேதி அன்று தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் ஸ்டாலின், புதிய சட்டத்திருத்த மசோதாவான, தமிழ்நாடு சட்டமன்றம் குற்றவியல் சட்டங்கள் (தமிழ்நாடு திருத்தம்) மசோதா 2025 மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடை (திருத்தம்) மசோதா2025 ஆகிய இரு சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் திருத்தங்கள் இடம்பெற்று இருந்தன. மேலும், பெண்களை பின் தொடர்ந்து சீண்டுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை, பெண்களை அச்சுறுத்தும் வகையில், ஆசிட் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு கொடுங்காயத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆயுள் தண்டனை, கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
ஆசிட்டை வீசுபவர்களுக்கும், வீச முயற்சிப்பவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கும் குறையாத மற்றும் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை கிடைக்கும். மேற்கண்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஜாமினில் வெளிவர முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இந்த சட்டத்திருத்த மசோதாவை சட்டசபை செயலகம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆய்வு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநர் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.