சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.. இதில், திருத்தப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை நிா்வாக பொறுப்புடமை சட்ட மசோதாவும் அடங்கும்.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா, 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதா, சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பேரவையில், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிா்வாக பொறுப்புடமை சட்ட மசோதா பேரவையில் 22.2.2024-இல் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அது குறித்து முடிவெடுக்காமல் வைத்திருந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, மசோதாவை திருப்பியனுப்பினாா். இது தொடா்பாக, பேரவைத் தலைவா் மு.அப்பாவுக்கு, ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த ஆக.25-இல் எழுதிய கடிதத்தில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததற்கான காரணங்களை குறிப்பிட்டு, இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தாா்.
இதைத்தொடர்ந்து அந்த மசோதாவை மறு ஆய்வு செய்து சட்டப் பேரவையில் நிதித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அண்மையில் தாக்கல் செய்தாா். பின்னர் எவ்வித எதிா்ப்புமின்றி மசோதா மீண்டும் நிறைவேறியதாக பேரவைத் தலைவா் அப்பாவு அறிவித்தாா். அந்த மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.