சென்னை: கோயிலில் பூசாரிகள் அச்சத்தில் இருக்காங்க.! கொண்டாடப்படும் சூழ்நிலை இங்கு முற்றிலும் மாறுபட்டிருக்கு என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியிருந்த நிலையில், கோயில் அர்ச்சகர் ஒருவர் அடக்குமறை ஏதும் நடைபெறவில்லை பதில் தெரிவித்து உள்ளார்.

ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் கும்பாபிஷேக விழாவை கொண்டாட பாஜகவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு சார்பாக பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் இதனை தமிழக அரசு முற்றிலும் மறுத்துள்ளது. அப்படி எந்த வித தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வுக்காக பக்தர்கள் நேரலையாக பார்ப்பதற்கபாக வைக்கப்பட்டிருந்த எல்இடி திரைகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தவும், அன்னதானம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து,   தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பாக் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது.

நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படு த்துகிறது என ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

இதற்கு கோதண்டராமர் கோவில் அர்ச்சகர் மோகன் பட்டாச்சாரி அளித்துள்ள பதிலில், அடக்குமுறை ஏதும் நடைபெறவில்லை. ஆளுநருக்கான பாதுகாப்பை பின்பற்றி முறையான வரவேற்பை அளித்தோம் என கூறியுள்ளார்.