சேலம்:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் நாளை சேலத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.
தமிழக ஆளுநராக இருந்த ரோசையா ஓய்வுக்கு பிறகு மகாராஷ்டிரா ஆளுனர் வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து தமிழக அளுநராக பன்வாரிலால் நியமனம் செய்யப்பட்டார்.
தமிழக ஆளுநராக பதவி ஏற்ற பன்வாரிலால் கோவையில் அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதற்கு தமிழக எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் தமிழக அரசு இதில் தவறில்லை என்று கூறிவந்தது. இந்நிலையில் 2வதாக கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வு செய்தார்.
அப்போது கழிப்பிடத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ஆளுநர் பார்த்ததாக புகார் எழுந்தது. ஆனால் இதை ஆளுநர் மாளிகை மறுத்தது. மேலும், அன்று கடலூரில் இருந்து திரும்பிய போது மாமல்லபுரம் அருகே ஆளுநர் கான்வாய் வாகனம் மோதி 3 பேர் பலியானதாக செய்திகள் வெளியானது. பின்னர் இதுவும் உண்மையில்லை என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்ந்து ஆளுநர் தொடர்பான செய்திகளை ஆளுநர் தரப்பில் உறுதி செய்யப்படாமல் வெளியிடக் கூடாது என்று ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநரின் ஆய்வுகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் வகையில் நாளை ஆளுநர் சேலம் வருவதாக ஆட்சியர் ரோஹிணி தகவல் தெரிவித்துள்ளார். அஸ்தம்பட்டி அரசு மாளிகையில் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளை ஆளுநர் சந்திக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .