டெல்லி: கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேர்ந்தால், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறை தொடர்ந்த வருகிறது. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதை தடுக்க நவீன முறைகளை கையாள வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைக்கு கடந்த 2013ம் ஆண்டே தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை மட்டும் இன்னும் பல இடங்களில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், நாடு முழுவதும் 58,098 பேர் கையால் மலம் அள்ளுபவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், ஜூலை 2022 இல் மக்களவையில் மேற்கோள் காட்டப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்க்களை சுத்தம் செய்யும் போது 347 பேர் இறந்துள்ளனர் என்றும், மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை நடைமுறையை தடுக்கும் வகையில், மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் 2022ம் ஆண்டு மார்ச் 15ந்தி சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலே எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருந்ததாவது,
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது தொடர்பாக நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்தில் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 276 பேரின் குடும்ப உறுப்பினர்கள் இழப்பீடு பெற்றுள்ளனர்.
கடந்த 2003ம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனு மீது, உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பிறப்பித்த உத்தரவில், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறியது.
இது போன்ற விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மறுவாழ்வு பலன்களை அளித்து வருகின்றன. மேலும், கழிவுகளை கையால் அகற்றும் துப்புரவு தொழிலாளர்களின் சுய வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது.
துப்புரவு தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக அளிக்கப்படும் உதவிகள்: குடும்பத்தில் உள்ள ஒரு துப்புரவு தொழிலாளிக்கு ரூ.40,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது.
துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவி அளிக்கப்படுகிறது. சுகாதாரம் தொடர்பான சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் கடன் பெறுவோருக்கு ரூ.5 லட்சம் வரை மூலதன மானியம் அளிக்கப்படுகிறது.
கழிவுகளை கையால் அகற்றும் துப்புரவு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது.
கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் (எம்எஸ்) 2013-ன் கீழ் கையால் மனித கழிவுகளை அகற்றும் வேலை கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது . அன்று முதல் யாரும், எந்த நிறுவனமும், கழிவுகளை கையால் அகற்றுவதற்கு துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது. இதை மீறுபவர்களுக்கு எம்எஸ் 2013 சட்டத்தின் 8வது பிரிவுபடி 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இந்த நடைமுறைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த பொதுநல வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த கால விசாரணைகளின்போது, நீதிபதிகள் மத்திய , மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர். நேற்று (அக்டோபர் 20ந்தேதி) நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன்படி,
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீடு தொகையாக அவர்களது குடும்பத்தாருக்கு 30 லட்சம் வரை யில் கொடுக்க வேண்டும் .
மேலும் கழிவுகளை அகற்றும் போது ஏற்படும் நிரந்தர உடல் பாதிப்புக்கு 20 லட்சம் ரூபாய் வரையில் இழப்பீடு தொகை அளிக்க வேண்டும்.
வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால், 10 லட்சம் ரூபாய் வரையில் இழப்பீடு தொகை அளிக்க வேண்டும்
இதனை மத்திய மாநில அரசுகள் ஒன்றாக நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் இழப்பீடு தொகையை சேர்ந்து அளிக்க வேண்டும். கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை தடுக்க அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இதனை அரசுகள் மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டிய விவகாரம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டார்.