சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் அரசு பள்ளி மாணாக்கர்கள் ஏராளமானை இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சென்னையில் ஒரே அரசு பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகளுக்கு இடம் கிடைத்துள்ளது. அதுபோல புதுக்கோட்டை கீரமங்கலம் அரசு பள்ளியில் படித்த 6மாணாக்கர் களுக்கும் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ளனர். இது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு மூலமே மருத்துவ படிப்புக்கு மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று ஓருபுறம் குரல் எழுந்தாலும், மற்றொரு புறம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு காரணமாக, ஏராளமான அரசு பள்ளி மாணாக்கர்களின் மருத்துவர் கனவு நிறைவேறி வருகிறது.
ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில், 436 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் கிடைத்தன.
ஆனால், இந்த ஆண்டு புதிதாக 11 அரசு மருத்துவ கல்லூரிகளும், 3 சுயநிதி மருத்துவ கல்லூரிகளும், 1 சுயநிதி பி.டி.எஸ். கல்லூரியும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் 7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்கள் சற்று அதிகரித்திருக்கின்றன. அதன்படி, அரசு மருத்துவ கல்லூரிகள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 437 எம்.பி.பி.எஸ். இடங்களும், 107 பி.டி.எஸ். இடங்களும் என மொத்தம் 544 இடங்கள் இந்த ஆண்டு அரசு பள்ளி மாணாக்கர்களுக்காக காத்திருக்கிறது.
அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு நேற்று (28ந்தேதி) மற்றும் இன்றும் நடைவெபறுகிறது. இந்த இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தவர்களில் ஆயிரத்து 806 பேர் தகுதியுடையவர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் 1 முதல் 719 வரையிலான தரவரிசையில் இருந்த மாணவ-மாணவிகள் நேற்று கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.
அதன்படி சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு மேல் கலந்தாய்வு தொடங்கியது. முதலில், தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் முதலில் அழைக்கப்பட்டனர். அதன்படி, முறையே சிவா (அறந்தாங்கி), பிரகாஷ்ராஜ் (திருவண்ணாமலை), சி.சந்தானம் (தர்மபுரி), வெங்கடேஸ்வரி (சேலம்), எஸ்.குமார் (தர்மபுரி), கவிபிரியா (செய்யாறு), தமிழ்பிரியா (செங்கம்), புவனேஸ்வரி (நாகை), ராகுல் (கடலூர்), கலையரசன் (சேலம்) ஆகியோர் இடங்களை தேர்வு செய்தனர். தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்து மருத்துவ படிப்பை தேர்வு செய்த மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இடஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான கலந்தாய்வில் சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து ஏழு மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதுபோல புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி கல்வி மாவட்டத்துக்குள்பட்ட ஆலங்குடி தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 13 போ் மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 20 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் உயரும் என கல்வித் துறை அலுவலர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 4 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மதுரையில் 20 மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அம்மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்து உள்ளார். கடந்த 13 மாணாக்கர்களுக்கு மட்டுமே கிடைத்த நிலையில், , தற்போது அதைவிட கூடுதலான இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு அதிக அளவில் மருத்துவம் படிக்க இடம்கிடைத்துள்ள தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.