அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் தாம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் ஏதுமின்றி பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரே நாளில், மக்கள் அலைமோதும் அளவுக்கு கூடுவது தான் சிக்கலாக இருக்கிறது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் பேசியிருக்கிறேன். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பியை இன்று இரவு காஞ்சிபுரம் செல்ல உத்தரவிட்டுள்ளேன், மக்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத நிலையில், வேலூரில் எந்த வாக்குறுதியை அளித்து திமுக மக்களிடம் வாக்கு கேட்கும் ? என்று தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாதபோது மக்கள் அவர்களை எப்படி நம்புவார்கள் ? தேர்தலில் வெற்றி பெற்று, திமுக பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசியே பொதுத்தேர்தலில் வெற்றியை கண்டது என்பதை நாங்கள் நிரூபிப்போம்” என்று தெரிவித்தார்.