டெல்லி: லாக்டவுன் காரணமாக வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை விரைவில் இந்தியா அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வெளியுறவு அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியா, மாநில அரசுகள் ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய நாட்டினரை அழைத்து வர திட்டமிட்டுள்ளது.
அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. லாக்டவுன் நீக்கப்பட்ட பின்னரே அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று தெரிகிறது. விமான சேவை தொடங்கிய பின்னர், வழக்கமான விமான சேவைகள் அல்லது சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
அந்த பயணத்துக்கான டிக்கெட் கட்டணங்களை சம்பந்தப்பட்டவர்களே செலுத்த வேண்டும். கொரோனா தீவிரத்தின் போது வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களை குறிப்பாக கேரளா மாநிலத்தவர்களை மீட்க வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்தன.
இதுமட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை அழைத்து செல்லுமாறு இந்தியாவுக்கு அரசியல் அழுத்தங்கள் தரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.