டெல்லி: கோவிட் ஆன்டிபாடி கிட்கள் தயாரிப்பில் குஜராத் நிறுவனத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது சர்ச்சையாகி இருக்கிறது.
அகமதாபாத்தை மையமாக கொண்ட பிரபல மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கிய எலிசா கருவிகளை பெருமளவில் உற்பத்தி செய்யும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
இதே போன்று மற்ற நிறுவனங்கள் இருக்கையில் ஏன் இந்த நிறுவனம் மட்டும் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டது என பல கேள்விகளும், சர்ச்சைகளும் எழுந்தன. சில நாட்களுக்கு முன்பு, ஐசிஎம்ஆர் கீழ் செயல்படும் புனேவில் உள்ள அரசு ஆய்வகமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி விஞ்ஞானிகள், கோவிட் கவாச் எனப்படும் எலிசா கிட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இது கிட்டானது, ரத்த மாதிரிகளில் நாவல் கொரோனா வைரஸ் ஆன்டிபாடிகள் இருப்பதை கண்டறியும். இந்த தொழில்நுட்பம் ஜைடஸ் காடிலாவுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எலிசா சோதனைக் கருவிகளின் ஒப்புதல்கள் மற்றும் வணிக ரீதியான உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கான சவாலை ஜைடஸ் முன்கூட்டியே ஏற்றுக்கொண்டார், இதனால் அவை விரைவாகப் பயன்படுத்தப்படலாம் என்று அமைச்சகம் அதே நாளில் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஆனால் மற்ற நோய்களைக் கண்டறிவதற்காக எலிசா கருவிகளை உருவாக்கும் பல நிறுவனங்கள், தொழில்நுட்ப பரிமாற்ற உரிமத்திற்கான ஏலம் பற்றிய விவரங்களை அறிந்திருக்கவில்லை. பிரபலமான 3 நிறுவனங்கள் இதை பற்றிய அறிவிப்புகளை செய்தித்தாள்கள் வழியாக தான் தெரிந்து கொண்டோம் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜைடஸ் காடிலா ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லாவ் அகர்வால், இரண்டு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
வேகமாக உற்பத்தி செய்யும் திறன் மற்றும் முதலில் உற்பத்தி செய்ய வேண்டிய இடம் ஆகியவை  அந்த அம்சங்களாகும் என்றார். தேவைப்பட்டால், பிற நிறுவனங்கள் இதில் சேர்க்கப்படும் என்றார்.