டெல்லி: இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பதற்கு மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது. அதேவேளையில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கவும் வலியுறத்தி உள்ளது.

தற்போது ஆன்லைன் கேமிங்களுக்கு 18 சதவீதமும் குதிரைப்பந்தயம் மற்றும் கேசினோவுக்கு 28 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஆன்லைன் கேம்களுக்கும் 28 சதவிகித ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் மாற்றம் செய்ய மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சர்கள் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் தமிழ்நாடு, தெலங்கானா, மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், கோவா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் அமைச்சகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் விவாதித்து, சில திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளது.

வரும் 11-ம் தேதி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி தொடர்பாக முடிவெடுக்கப்பட உள்ளது.

இதற்கான பரிந்துரையை அமைச்சகர்கள் குழு உருவாக்கியுள்ளது. அதன்படி, இம்மூன்றுக்கும் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டு,  அதன் பந்தயத் தொகைக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்று உத்தர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் பரிந்துரைத்துள்ளன. குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங்களின் வருவாய்க்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பரிந்துரைத்து உள்ளது. இவற்றை ஒருங்கிணைக்கும் தளத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க கோவாபரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடா்பான இறுதி முடிவு எடுப்பதற்கான பொறுப்பை ஜிஎஸ்டி கவுன்சிலிடமே மாநில நிதியமைச்சா்கள் குழு ஒப்படைத்துள்ளது.

தற்போது நடைமுறையில் சில வகையான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. சில மருந்துகளுக்கு 5 சதவிகித வரியும், சில மருந்துகளுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது.