சென்னை: அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்து அறிக்கை அளிக்க வேண்டும் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், 45வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், அரசு அலுவலர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாட்டில் கோவிட் – 19 நோய்த்தொற்று இரண்டாவது அலை பரவிக்கொண்டு வருவதால் நோய்த்தொற்று மேலும் பரவாமல் இருக்க தாமதமின்றி 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பொதுப்பணித்துறை ( கட்டடம் ) அலுவலர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

கோவிட் நோய்த்தொற்று மேலும் பரவாமல் இருக்க அலுவலர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்காணும் நடைமுறையினை வட்டம் மற்றும் கோட்ட அலுவலகங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை கண்காணித்து அதனை உறுதிப்படுத்தி இவ்வலுவலகத்திற்கு விரைவில் அறிக்கை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.