அரசு அதிகாரிகள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல! உச்சநீதிமன்றம் கண்டிப்பு

டில்லி,

சிஆர்பிஎப் காவலரை பணி நீக்கம் செய்த உயரதிகாரி குறித்த மேல்விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள்  அரசுத்துறை அதிகாரிகள் என்பவர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல கண்டிப்புடன் கூறினர்.

சிஆர்பிஎஃப் காவலர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், அந்த பணிநீக்க உத்தரவை ரத்து செய்த அசாம் கவுகாத்தி உயர்நீதிமன்றம், சிஆர்பிஎஃப் உயரதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கும் பதிவு செய்தது.

இந்த விவகாரத்தில் வரும் 19ம் தேதிக்குள் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கவுகாத்தி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிஆர்பிஎப் அதிகாரிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அதிகாரிகளுக்கு ஆதரவாக  மத்திய அரசு வழக்கறிஞர் அஜித் குமார் வாதாடினார்.

ஆனால், அவரின் வாதங்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. தேவைப்பட்டால் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, உத்தரவை மாற்றியமைக்க கோரி உயர்நீதி மன்றத்தை அணுகலாம் என்று கூறிய  ஆர்.கே.அகர்வால், எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு, அதிகாரிகள் என்பவர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்று கண்டித்தது.

இதுபோன்ற வழக்குகளில், மத்திய அரசு கடைசி நேரத்தில் இங்கு வந்து முறையிடுவதை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் சென்று சிஆர்பிஎஃப் அதிகாரி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.


English Summary
Government officials are not above the law! The Supreme Court