சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும், தமிழக அரசின் இ-பாஸ் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாடுகளில் தமிழகம் திரும்ப விரும்பும் பலரும், வெளிநாட்டு தமிழர்களும் தமிழகம் வருவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, மத்தியஅரசு வந்தேபாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கி அழைத்து வருகிறது.
தற்போது மத்தியஅரசு கொரோனா முடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இன்னும் விடாப்பிடியாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, மக்களின் அன்றாட நடவடிக்கைகளை முடக்கி வருகிறது.
தற்போது, இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் செயல்பட தொடங்கி உள்ள நிலை யில், தமிழகஅரசு தொடர்ந்து வரும் கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழகத்தில் போதிய அளவு விமானங்களை இயக்க முடியாத நிலையே இருந்து வருகிறது.
இந்த நிலையில் சிறப்பு விமானங்களில் சென்னை விமான நிலையம் வந்திறங்கும் பயணிகள் தேவையான மருத்துவச் சான்றிதழை வைத்திருந்தும் அரசாங்கத் தனிமைப்படுத்துதல் வளாகங் களுக்கு அனுப்பப்படும் சூழலை ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதனால், பல பயணிகள் தமிழகம் வர விருப்பம் தெரிவிப்பது இல்லை என்றும், பல பயணிகள் சென்னைக்கு செல்லாமல் வேறு நகரங்களில் இறங்கி பின்னர் அங்கிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது சாலை வழியாக சென்னைக்கு வருவதாகவும், வெளிநாடுகளில் சிக்கி உள்ள பல தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு வர விரும்புவது இல்லை என்றும் கூறப்படுகிறது.