சென்னை: மாரிதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு செய்து உள்ளது.
தமிழகஅரசை கடுமையாக விமர்சித்து வருபவர் பிரபல யுடியூபர் மாரிதாஸ். இவர் கடந்த ஆண்டு, ஹெலிகாப்டர் விபத்தில், இந்தியா முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தபோது, தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பதிவு போட்டிருந்தார். தனது யுடியூப் சேனலில், தமிழகம் காஷ்மீர் ஆக மாறி வருகிறது என பதிவிட்டிருந்தார்.
அவரது கருத்து, பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக கூறி , பல்வேறு பிரவுகளில், அதாவது 505(1)&(2), 124(A), 504, 153(A) பிரிவுகளில் மாரிதாஸ்மீது வழக்கு பதிவு செய்து கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், அரசுமீதான வழக்கை எதிர்த்து மாரிதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்ததுடன், தமிழகஅரசின் நடவடிக்கை யையும் கடுமையாக சாடியிருந்தது.
இந்த நிலையில், மாரிதாஸ் மீதான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை கோடை விடுமுறைக்கு பிறகு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.